Saturday, April 20, 2013

கொஞ்சம்....



கொஞ்சமாகவே படித்தேன்
குறைவான மதிப்பெண்
பெற்றேன் !

கொஞ்சமாகவே உழைத்தேன்
குறைவான ஊதியம்
பெற்றேன் !

கொஞ்சமாக ஜெபித்தேன்
கொஞ்சமாகவே ஜெயித்தேன் !

கொஞ்சம் என்பது ஒரு
பெருங்குறை....


முழு இதயத்தோடு
முழு ஆற்றலோடு
முழு நம்பிக்கையோடு
முழுவதுமாக
செயலில் கரைந்து,
காணமல் போவதில்தான்
முழு வெற்றி உள்ளது என்பதை
இப்போது முழுமையாக
உணர்கிறேன் !

Saturday, January 12, 2013

ஆனந்தம்


அன்பான கைக்குலுக்கல்
இன்று
அழுத்தமானது !

அளவோடு சிரிக்கும் புன்சிரிப்பு
இன்று
அழகானது !

வாய் பேசாதவர்கள்கூட
இன்று
வாழ்த்துகிறார்கள் !

புத்தாண்டு - பொங்கலுக்கு
நன்றிகள் !

Saturday, July 28, 2012

இன்பம்



 இன்பம்
 -----------

மலரின் மென்மை..

வசீகரிக்கும் வாசம்..

வீசும் தென்றல்..

கனிகளின் சுவை..

வண்ணத்துப்
பூச்சிகளின் வண்ணம்..


இதம் தரும்
இளம்காலை சூரியன்..

முழு நிலவு..


நம்மைச் சுற்றி   
இயங்கும் இயற்கை

இதமானது
இன்பமானது !


இயற்கையை
நேசிப்போம் !

இயற்கையாய்
வாழ்வோம் !

இயற்கையும்,
இறைவனும் ஒன்று,
இயற்கையோடு இணைந்திருப்பது
இறைவனோடு இணைவதற்கு
இணையானது !

Thursday, June 28, 2012

மா. பொ. சி




தமிழர்களின் அடையாளம் வீரம்.
வீரத்தின் அடையாளம் மீசை.

 மா. பொ. சி என்றதும்
நினைவுக்கு வருவது
அவரது பெரிய மீசை !

தமிழ்மீதும், தமிழ் மண்ணின்மீதும்
அவருக்கு இருந்தது
தீராத ஆசை !

 நாட்டு விடுதலைக்காகப்
போராடி சிறை சென்றவர்,
சித்தரவதைகளை
அனுபவித்தவர்.

அங்கே, தமிழ் இலக்கியங்களையும் காவியங்களைக் கற்றார். '

சிலப்பதிகாரம்' அவருக்குச்
சிநேகதியானாள்,

' சிலம்புச் செல்வர்' என்று
தமிழ் மக்களால் அன்பாக
அழைக்கப் பெற்றார் !

Sunday, May 6, 2012

கலையா.. அறிவியலா ..

வணிகம் புரிவதும், தொழில் செய்வதும், நிர்வாகம் நடத்துவதும் அறிவியல் சார்ந்தது மட்டும்தானா ? இல்லை ! இவைகள் ஒரு கலைத்தன்மை வாய்ந்தவைகள் என்றும் மேலாண்மை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளைப் பார்ப்பதும், ஊழியர்களைப் பட்டியல்செய்து மாத ஊதியம் வழங்குவதும் கணிதமும், கணிதவியல் சார்ந்தது ஆகும். அதே நேரத்தில், ஒரு நிறுவனத்தை அடையாளப்படுத்தும் ஒரு சின்னத்தை ( லோகோ) உருவாக்குவது என்பது முழுக்க, முழுக்க கலை வடிவம் ஆகும்.

 பன்னாட்டு தொழில் முனைவோர் திரு ஆண்டி வூர்கோல் அவர்களின் முக்கியமான ஒரு மேற்கோள்... " பணம் ஈட்டுவது ஒரு கலை, வேலை செய்வதும் ஒரு கலை, வணிகம் புரிவது மிகச் சிறந்த ஒரு கலை " என்கிறார்.

 சந்தையில் அவ்வப்போது நிகழும் மாறுதல்கள், எந்த அளவிற்கு தாக்குதல்களை ஏற்படுத்தும் என்பதைப் பகுத்து ஆய்வதில் அறிவியல் அடங்கியுள்ளது. - சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் இவை அனைத்துமே மனித நடத்தைகள் பற்றிய நுணுக்கமான உணர்வுகளைக் கொண்டது. - மனதிற்குப் புரிதல் உணர்வையும், கண்களுக்கு அழகுணர்ச்சியையும் உருவாக்கச் செய்ய வேண்டிய வழிமுறைகளில் கலைகள் மேலோங்கி நிற்கிறது.

 வெற்றிப் பெற்ற விற்பனையாளர்கள் பொதுவாகச் சொல்லும் ஒரு வாக்கியம் " தொழில் ரீதியான அணுகுமுறை; தனிப்பட்ட முறையில் கவனத்தைக் கவர்தல் " ( Professional Approach and Personal Touch ) என்பதாகும்.

பன்னாட்டு மனிதவள மேம்பாட்டு வல்லுனரும், தொழில் ஆலோசகருமான திரு. டீன் ஸ்டான்லி கூறும்போது... " தொழில், வணிக மேலாண்மையில் ஐம்பது விழுக்காடு கலையும், ஐம்பது விழுக்காடு அறிவியலும் உள்ளது " என்கிறார்.

+++ ( வளர் தொழில் இதழுக்கு நான் எழுதிய கட்டுரையின் சுருக்கம் - ஏப்ரல் 2012 )

Sunday, April 1, 2012

விருது

.


" ஒவ்வொரு மனசும், ஒரு சிறிய பாராட்டுக்குதானே ஏங்குது ! "


' பசங்க ' படத்தில் வரும் முக்கியமான ஒரு வசனம் இது

பாராட்டுக்களும், விருதுகளும், அங்கீகாரமும் அவசியமானது.

(24.03.2012) அன்று சனிக்கிழமை சென்னை - தேவநேய பாவாணர் அரங்கில் எனக்கு
" பயன் எழுத்துப் படைப்பாளர் " எனும்
விருது, இதழ்கள்-பதிப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.

திரு ரமேஷ் பிரபா ( சன் T.V குழுமத்தின் தலைவர் ) அவர்கள் விருதுகளை வழங்கி, பாராட்டுரை வழங்கினார். இது
துறை சார்ந்த படைப்பாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.

கணினி , ஏற்றுமதி வர்த்தகம், தொழில் வளர்ச்சி, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறை சார்ந்து, எழுதி வரும் படைப்பாளர்களுக்கான விருது அது. என்னோடு 20 பேர் விருது பெற்றார்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக அவ்வப்போது
" வளர் தொழில் " மாத இதழில் எழுதியதற்காக
எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது.


ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் என்னை பரிந்துரை செய்தார். தொலை பேசியில் அழைத்து பேசினார்.  நான் நன்றி சொன்னேன்.

கதை , கவிதைகள் எழுதுவதற்கு நிறைய பேர்கள்
இருக்கிறார்கள்.

தொழில் - வணிகம் குறித்தும், நிதி மேலாண்மை, விற்பனை போன்றவற்றை எழுதுவோர் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். நான் எனது துறையில் தொடர்ந்து எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.

எத்தனையோ முறை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அனால், அன்றுதான் முதன்முறையாக மேடைக்கு வந்து, விருது வாங்கி இருக்கிறேன்.

என் மனைவி, மகன்கள், நண்பர்கள் உடன் இருந்தார்கள். கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.

அந்த சனிக்கிழமை, ஒரு சந்தோஷ சாயங்காலம்.


++

Thursday, March 1, 2012

அழகு

கனவுகள்

தூக்கத்தை கலைக்காதவரை
அழகு !


உறவுகள்

உதவி கேட்டகாதவரை
அழகு !


மனம்

சுருங்காதவரை
அழகு !



மலர்

உதிராதவரை
அழகு !



விண்மீன்

வானில் இருக்கும்வரை
அழகு !



வசீகரிக்கும் எழுத்தாளர்கள்

நேரில் பார்க்காதவரை
அழகு !