Wednesday, August 4, 2010

எழுத்தும் வாசிப்பும்

இயல்பாகவே புத்தகத்தின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அச்சுகூடத்திற்குள் நுழைந்த உடன் வீசும் காகித வாசமும்
எனக்குப் பிடித்தமானது.

அச்சு ஊடகம் வலுவிழந்து வருகிறது,
காட்சி ஊடகம்தான் இனி ஆதிக்கம் செலுத்தும்
என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

படிப்பது சுகமான அனுபவம் !

புத்தகப் பிரியர்கள் பெருகி வருகிறார்கள் என்பதற்கு
புத்தகக் கண்காட்சியே சாட்சி !

நான் சிறுவனாக இருக்கும்போது, காசை சேர்த்து வைத்து
வாங்கிப் படிக்கும் பத்திரிகை " கல்கண்டு " .
அப்போது அதன் விலை ஐம்பது பைசா என்று நினைக்கிறேன்.

வாலிப பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த பத்திரிகை
" ஜூனியர் போஸ்ட் " . உள்ளூர் செய்தி முதல், உலகச்
செய்தி வரை அதில் இருக்கும்.

1990 களில் தினமணி புதுப் பொலிவுடன் வரத் தொடங்கியது.
தீவிர வாசகனாக மாறினேன்.
மாலன் சில காலம் அதற்கு ஆசிரியராக இருந்தார்.
அப்போது வெளிவரும் தினமணி கதிர், ஜூனியர் விகடனுக்கு
நிகராக இருக்கும். படித்து மகிழ்வேன்.

நூலகத்தில் நுழைந்தால் வெளியே வரும் கடைசி ஆளாக
நான்தான் இருப்பேன்.
நூலகர் முதலில் ஜன்னலை சாத்துவார்.
விளக்கை அணைப்பார். பின்னர் என்னை
பார்த்து முறைப்பார்.

பெருகிவரும் வாசகர்களுக்கு இணையாக பல புதிய
எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள்.
எழுத்து பிரம்மாக்களை வணங்குகிறேன்

இப்போது வலைப்பூக்களில் எழுதும் எழுத்துக்களை அதிகம்
வாசிக்கிறேன்.

பத்திரிகை விதிமுறைகளைக் கடந்து சுதந்திரமாக எழுதும்
அவர்களின் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கிறது.

குறிப்பாக, பெண்கள் அதிகமாக எழுதுகிறார்கள்.
இவர்களில், பெரும்பாலோர் எழுத்தாளர்களோ, பத்திரிகையாளர்களோ
கிடையாது.

வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகள், மாணவிகள்,
வேலைக்குச் செல்வோர், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள்
ஆகியோர்கள்தான்.

வீடு, சமையல், கணவர், பிள்ளைகள், படிப்பு, குடும்ப பாரம்,
உறவினர்கள், இத்தனையையும் தாண்டி
சமுதாயத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள்,
நுணுக்கமாக எழுதுகிறார்கள்.
அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

பூவையரின் பேனாக்கள் புதுமைகளைச் செய்து வருகிறது !

வலைப்பூக்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என்
அன்பார்ந்த ( மானசீகமான ) கைக்குலுக்கல்கள்