Wednesday, December 1, 2010

சாவி பொம்மை

சாவிக் கொடுத்து ஓடி நின்ற
பொம்மையாய்
அலுவல் முடிந்து வீட்டிற்குள்
நுழைகையில்
கட்டி அணைக்க வருகிறான்
அன்பு மகன்.

அழுக்காய், வியர்த்துப்போய்
இருக்கிறேன்;
குளித்து விட்டு வருகிறேன்
என்றேன்;
அணைத்தக் கைகளை
விலக்கிய படி.

சற்று நேரத்திற்குள்...
குனிந்தத் தலை நிமிராமல்
வீட்டுப் பாடத்திற்குள்
மூழ்கி விட்டான்;
அவனின் ஆசிரியர்
அவனுக்குக் கொடுத்த
சாவியின் படி !

ஆம் !

யாரோ கொடுக்கும் சாவிக்கு
யாருக்காகவோ இயங்கிக்
கொண்டிருக்கிறோம்...
எந்திர மனிதனாய்,
பொம்மையாய் !

ஆற்றல்மிக்க இறைவா !

சாவி மனிதர்களை உமது
ஆவிக்குரிய மனிதர்களாய்
மாற்றும் !

எம்மை உமது கருவியாகப்
பயன்படுத்தும் !


எஸ். எஸ். ஜெயமோகன்

Thursday, November 4, 2010

வெள்ளை முடி

++


நேற்று :-
========

அரைக்கால் சட்டையிலிருந்து
முழுக்கால் சட்டைக்கு
முன்னேறிய போதும்..

அரும்பு மீசை குறும்பாய்
எட்டிப் பார்த்த போதும் ..

இடுப்பில் நிற்காத லுங்கியை
இறுகக் கட்டி - பெரிய பையனாய்
வீதியில் வலம் வந்த போதும்...
எனக்குள் நான்
பரவசப் பட்டிருக்கிறேன் !


இன்று :-
=======


மீசையில் ஒரு வெள்ளை முடி
முளைத்து இருந்தது ..

கொஞ்ச நேரம் உடல் படபடத்தது..
மனம் பரிதவித்தது !

நீ முதியவனாய் ஆகிறாய் என்பதின்
முத்திரையாய் அது எனக்குப் பட்டது.

வெள்ளை முடி எனக்குள் எச்சரிக்கை
செய்தது.
இதுவரை செய்த தவறுகளை
உரமாக்கு..
பெற்ற அனுபவங்களை
பாடமாக்கு..
சாவதற்கு முன்பு
சாதனை செய்..
சற்று சத்தமாய் சொன்னது !

பெருமூச்சிட்டுக் கிளம்பும்
ரயில் என்ஜினாய் ஆனது
எனது உள்ளம்.

வெள்ளைக் கொடி
அழகாய் அசைந்து சைகை
செய்வது மாதிரியே இருந்தது
மீசையில் முளைத்த ஒரு
வெள்ளை முடி!!


++

Saturday, October 9, 2010

அகிலம் போற்றும் அன்னை

அன்னை தெரசா நம் அனைவருக்கும் தெரிந்த அன்னை.

அவரின் நூற்றாண்டு விழாவை உலகமே கொண்டாடி
போற்றுகிறது. அன்பை, அருளை, சேவையை தருவதற்காகவே
பிறந்தவள். எதைச் செய்தாலும் தியாகம் என்ற அடிப்படை
நோக்கத்தோடு இருப்பதை தன்னளிப்புத் தன்மையோடு
தருவது என்ற கொள்கையை விதைத்து சாதித்தார்.

ஒருமுறை அன்னை அவர்கள் ஆதரவற்ற முதியவர்களுக்காக
நிதி திரட்டும்போது ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
ஒரு வணிகரிடம் கையேந்தி காசு கேட்கும்போது, காரி
உமிழ்ந்தாராம். அன்னை கோபப்படவில்லை. அவரின் இந்த
செயலைக் கண்டு அவரை சபிக்கவும் இல்லை. சாந்தமாகச்
சொன்னார்.. " ஐயா .. நீங்கள் உமிழ்ந்த எச்சியை நான் எடுத்துக்
கொள்கிறேன். என் பிள்ளைகளுக்கு ஏதேனும் கொடுங்கள் ... "
என்று இன்னொரு கையை அந்த வணிகரிடம் நீட்டினார்.
அன்னையின் உறுதியான அன்பிற்கு முன்பு அந்த வணிகர்
தலை குனிந்தார். தனது செயலுக்கு வருத்தம் தெருவித்தார்.
பின்னர், வேண்டிய உதவிகளை அன்னைக்குச் செய்தார்.
அன்னையின் சகிப்புத் தன்மைக்கு இது ஒரு சான்று.

அன்னை அல்பினியா நாட்டில் 26.08.1910 ஆம் ஆண்டில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் ஆக்னஸ் கொன்சா. துறவறம் ஏற்று
இந்தியா வந்தார். தனது பெயரை தெரசா என்று மாற்றிக்
அமைத்துக் கொண்டார். மிகவும் பிறப்படுத்தப் பட்ட இந்தியர்கள்
முக்கியமாக தொழுநோயால் அவதியுற்றவர்களைத் தொட்டு
பாதுகாத்து அரவணைத்தார். சமுதாயத்தில் ஓரங்கட்டப் பட்டவர்கள்
என்ற பிரிவில் வாழ்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கு இவர் ஒரு
பள்ளியைத் தொடங்கினார். கூரை கூட இல்லாத இடத்தில்
தரையில் உட்கார்ந்து சிறுவர்களுடன் மண்ணில் விரலால் எழுதி,
வங்க மொழி கற்பித்தார். புன்னகை மின்ன கடுமையாக உழைத்து
அன்பின் அடையாளமாக திகழ்ந்தார்.

1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
190000 டாலருக்கான காசோலையைப் பெற்றார்.

1962 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 1980 ஆம் ஆண்டில் பாரத் ரத்னா
விருதும் பெற்றார்.

அன்பின் அன்னை 05.09.1997 அன்று மறைந்தார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாதிகள்,
ஏன் ... கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக எதிர்க்கும் பிறமத சகோதரர்கள்கூட
கிறிஸ்துவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும், சேவை அமைப்பிற்கும்,
தலை வணங்குகிறார்கள். அவர்களின் மனித நேயத்தை மதிக்கிறார்கள்.
இவற்றிற்கு அன்னை தெரசா போன்று தொண்டு செய்து வரும் எண்ணற்ற
அருள் சகோதரிகள்தான் அடிப்படை காரணங்கள் ஆகும்.

ஒரு புதுக் கவிஞன் அன்னையை இரண்டு வரிகளில் சொன்னான்.

" அன்னையே நீ கருவுற்று இருந்தால் ஒருவருக்கு தாயாகி இருப்பாய்..
கருணையுற்றதால் உலகிற்கே தாயானாய் .. " என்றார்.

ஆம். கருணை உள்ளங்கள் எல்லோரும் கடவுளின் இல்லங்கள்தான்.

Saturday, September 4, 2010

எம். பி. ஏ பட்டம்

எம். பி. ஏ பட்டத்தின் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதையை உண்டு.

எனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் எம். பி. ஏ பட்டதாரிகள்.
அவர்கள் இப்போது உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள்.

ஷங்கர் ராமன் - இதற்க்குமுன் நான் பணி புரிந்த நிறுவனத்தின்
எம். டி. அவர் ஒரு எம். பி. ஏ., பட்டதாரி
இவருடைய நிர்வாகத் திறமையைக் கண்டு நான் பலமுறை
வியந்து இருக்கிறேன். வேலை வாங்கும் விதம், ஆளுமை,
முடிவு எடுக்கும் திறன் அனைத்தும் அசாதாரணமானது.
இவருக்கு உடம்பெல்லாம் மூளை என்று நாங்கள்
பேசிக் கொள்வோம். எப்போதும் பிசினஸ், பிசினஸ்தான் !

நான் பெரிதும் நேசிக்கும் திரைப்பட இயக்குனர் மணிரத்தினம்
ஒரு எம். பி. ஏ பட்டதாரி. " இந்தப் படிப்பு எனக்கு திட்டமிடுதலுக்குப்
பயன் படுகிறது " என்று பல முறை சொல்லி இருக்கிறார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் ஒருவர்,
அவரது நிறுவனத்தில் ஒரு முக்கிய பதவிக்கு என்னை
விண்ணப்பிக்கச் சொன்னார். நான் உடனடியாக மின் அஞ்சல்
செய்தேன். அவர் என்னை திருப்பி அழைத்து மிகவும் கடிந்து
கொண்டார்.

" நீ வெறும் பி.ஏ தானா ? எம். பி. ஏ படிக்க வில்லைய ? "
என்றார்.

" நீ ... ஜூனியர் விகடன், நக்கீரன் இதை எல்லாம் படித்து
வயசைத் தொலைத்து விட்டாய் ... படிக்க வேண்டியதை
படிக்கலடா !!! " என்றார்.

ஓங்கி முகத்தில் குத்தியது போல் இருந்தது அப்போது !


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தொலை தூரக் கல்வி வாயிலாக
( அழகப்பா பல்கலைக் கழகம் ) எம். பி. ஏ., பயின்றேன்.

சென்ற வாரம், இரண்டாம் ஆண்டு-கடைசி செமஸ்டர் தேர்வு முடிவு
இணையத்தில் வெளி வந்தது.
அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சிதான் !
ஐம்பதாறு விழுக்காடு மதிப்பெண் பெற்றேன்.

நான் இப்போது எஸ். எஸ் ஜெயமோகன் எம். பி. ஏ.,
கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது !

பி.ஏ பட்டம் பெற்றது இருபது வயதில்.
எம். பி. ஏ பட்டம் பெற்றது நாற்பது வயதில் !

இடைப் பட்ட இருபது ஆண்டுகளில், நான் பட்ட, பெற்ற
அனுபவங்கள்தான் நிஜமான எம். பி. ஏ., என்பதை
நிதர்சனமாக உணர முடிகிறது.

என்ன செய்வது ?
உலக வாழ்வில், நாம் நமது தகுதியைச் சொல்ல காகிதத்தில்
அச்சடித்த சான்றிதழ்கள் தேவைப் படுகிறது !!

Wednesday, August 4, 2010

எழுத்தும் வாசிப்பும்

இயல்பாகவே புத்தகத்தின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அச்சுகூடத்திற்குள் நுழைந்த உடன் வீசும் காகித வாசமும்
எனக்குப் பிடித்தமானது.

அச்சு ஊடகம் வலுவிழந்து வருகிறது,
காட்சி ஊடகம்தான் இனி ஆதிக்கம் செலுத்தும்
என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

படிப்பது சுகமான அனுபவம் !

புத்தகப் பிரியர்கள் பெருகி வருகிறார்கள் என்பதற்கு
புத்தகக் கண்காட்சியே சாட்சி !

நான் சிறுவனாக இருக்கும்போது, காசை சேர்த்து வைத்து
வாங்கிப் படிக்கும் பத்திரிகை " கல்கண்டு " .
அப்போது அதன் விலை ஐம்பது பைசா என்று நினைக்கிறேன்.

வாலிப பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்த பத்திரிகை
" ஜூனியர் போஸ்ட் " . உள்ளூர் செய்தி முதல், உலகச்
செய்தி வரை அதில் இருக்கும்.

1990 களில் தினமணி புதுப் பொலிவுடன் வரத் தொடங்கியது.
தீவிர வாசகனாக மாறினேன்.
மாலன் சில காலம் அதற்கு ஆசிரியராக இருந்தார்.
அப்போது வெளிவரும் தினமணி கதிர், ஜூனியர் விகடனுக்கு
நிகராக இருக்கும். படித்து மகிழ்வேன்.

நூலகத்தில் நுழைந்தால் வெளியே வரும் கடைசி ஆளாக
நான்தான் இருப்பேன்.
நூலகர் முதலில் ஜன்னலை சாத்துவார்.
விளக்கை அணைப்பார். பின்னர் என்னை
பார்த்து முறைப்பார்.

பெருகிவரும் வாசகர்களுக்கு இணையாக பல புதிய
எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள்.
எழுத்து பிரம்மாக்களை வணங்குகிறேன்

இப்போது வலைப்பூக்களில் எழுதும் எழுத்துக்களை அதிகம்
வாசிக்கிறேன்.

பத்திரிகை விதிமுறைகளைக் கடந்து சுதந்திரமாக எழுதும்
அவர்களின் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கிறது.

குறிப்பாக, பெண்கள் அதிகமாக எழுதுகிறார்கள்.
இவர்களில், பெரும்பாலோர் எழுத்தாளர்களோ, பத்திரிகையாளர்களோ
கிடையாது.

வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகள், மாணவிகள்,
வேலைக்குச் செல்வோர், தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள்
ஆகியோர்கள்தான்.

வீடு, சமையல், கணவர், பிள்ளைகள், படிப்பு, குடும்ப பாரம்,
உறவினர்கள், இத்தனையையும் தாண்டி
சமுதாயத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள்,
நுணுக்கமாக எழுதுகிறார்கள்.
அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

பூவையரின் பேனாக்கள் புதுமைகளைச் செய்து வருகிறது !

வலைப்பூக்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என்
அன்பார்ந்த ( மானசீகமான ) கைக்குலுக்கல்கள்

Saturday, July 3, 2010

ஆறுதல் ஒரு பக்கக் கதை

கதவைத் தட்டும் சப்தம் கேட்டு படபடப்புடன் எழுந்து
போனாள் என் மனைவி.

'முறுக்கு', 'அதிரசம்' விற்கும் சிறுவன் வாசலில் நிற்கிறான்.

" டேய் .. உங்களுக்கெல்லாம் எத்தனைமுறை சொன்னாலும் புரியாதா?
இந்த மாதிரி பகல் நேரத்துல, அதுவும் லீவு நாளு அதுவுமா, வீட்டுக்கு
வந்து ஏண்டா தொந்தரவு பண்ணுறீங்க ! ? பொரிந்து தள்ளினாள்
என் மனைவி.

" லலிதா ... ஒரு நிமிஷம்; அந்தப் பையங்கிட்ட கொஞ்சம் அதிரசம்,
முறுக்கு வாங்கிக்கோ" என்றேன்.

" டேய்... அஞ்சு ரூபாய்க்கு முறுக்கு, அஞ்சு ரூபாய்க்கு அதிரசம் கொடு "..
எரிச்சலுடன் வாங்கினாள்.

" ஏங்க.. நீங்கதான் எண்ணெய் பலகாரம் எல்லாம் விரும்பிச் சாப்பிட
மாட்டிங்களே, அப்புறம் எதுக்கு வாங்கச் சொன்னிங்க? " திகைப்புடன்
கேட்டாள்.

" அந்தப் பையனுக்கு ஒரு வியாபாரம் கொடுக்கலாம்ன்னுதான்.
அதனால அவனுக்கு ஏதோ லாபம் கிடைக்குங்குறதுக்காக
மட்டுமல்ல.. நான் இப்போ பார்த்துட்டு இருக்குற சேல்ஸ்
ரெப் வேலையின்போது சில கம்பெனிக்காரங்க என்னை
உள்ளேயே விடமாட்டங்க. மரியாதை இல்லாம பேசுவாங்க..
ஆனாலும் ஒரு சில நேரத்துல சிலர், மதிச்சு, என்னிடம்
பொருள்களை வாங்கலனாக்கூட ஆர்வமா கேப்பாங்க.
அப்போ எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கும்
தெரியுமா ? என் தொழில்மீது எனக்கிருக்கும் மதிப்பு இன்னும்
மிகுதியாகும் ! "

நான் பேசிக்கொண்டிருக்கும்போதே.. மறுபடியும் யாரோ
கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.

என் மனைவி இப்போது புன்முறுவலுடன் எழுந்துச் சென்றாள்

++++

நான் எழுதிய இந்தக் கதையை
குமுதம் வெளியிட்டது

நன்றி : குமுதம்.

Wednesday, June 9, 2010

பெண்பால்

தி. நகர் ( ஆர். எம். கே. வி ) துணிக்கடை அருகில்
காவல் துறையின் அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது.

அதில், "பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை"
என்று சிலரின் படத்தைப் போட்டிருந்தார்கள்.
அதில் நான்கு- ஐந்து பெண்களும் அடங்குவர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகன்,
" அப்பா ... பொம்பளைங்ககூட திருடுவாங்களா ? ! "
என்று என்னிடம் வியப்பாகக் கேட்டான்.

அவனக்குப் புரிய வைப்பதற்கு மிகவும்
சிரமப் பட்டேன்.

இன்னொரு அனுபவம்....

தொலை தூர கல்வி வாயிலாக எம்.பி. ஏ.,
படிக்கும் நான், சமிபத்தில், திருவான்மியூரில்
உள்ள நெல்லை நாடார் பள்ளீயில் கடைசி
செமஸ்டர் தேர்வு எழுதினேன்.

முன் இருக்கையியல் முப்பது வயது மதிக்கத் தக்க
ஒரு பெண்மணி துண்டு சீட்டில் எழுதி, சுருட்டி
பீடி போல் நிறைய " பிட்" பேப்பர் வைத்திருந்தாள்.

தேர்வு தொடங்கியதும் கொஞ்சமும் கூச்சம்,
பயம் இல்லாமல் ஒவ்வொன்றாக எடுத்து
காப்பி அடித்து எழுதினாள்.

இதைப் பார்த்த எனக்கு ஆச்சரியமும், வேதனையும்,
கொஞ்சம் கோபமும் வந்தது.

அப்படிக் காப்பி அடித்து வெற்றிப்பெற வேண்டுமா ?
என்பதுதான் எனக்குள் எழுந்த கேள்வி !

இந்தச் சம்பவத்தை அலுவலகத்தில் நண்பர்கள்
சிலருடன் பகிர்ந்து கொண்டேன். அப்போது, ஒருவர்
" பொம்பளைங்ககூட காப்பி அடிப்பாங்களா... " என்று
வியப்புடன் கேட்டார்.

தி. நகரில் என் மகன் கேட்ட அதே கேள்விதான்
நினைவுக்கு வந்தது.

ஆண்கள் பார்வையில், பெண்கள் தவறு செய்யாதவர்களாவே
கருதப்படுகிறார்கள். எதிர்ப்பார்க்கிறார்கள்.

பெண்கள் மேன்மையானவர்களே !

Wednesday, May 19, 2010

முகம்

ஒரு வாரமாய் தொடர்ந்து
ஜுரம்,

ஒட்டியது
கன்னம்.

முகச் சவரம் செய்யாத
என் முகத்தைக் கண்ணாடியில்
பார்த்தேன்..

தெரிந்தது -
அப்பாவின் முகம் !!

Sunday, May 16, 2010

இசையின் தரிசனம்


சமிபத்தில், ஏற்றுமதி-வர்த்தகம் தொடர்பான ஒருநாள் கருத்து அரங்கம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்று மாலை நேரத்தில் வெளியே வரும் போது, வரவேற்பு கூடத்திற்கு அருகில் இசை அமைப்பாளர் இளையராஜா அங்கு தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இசைக்கென்று இசைகின்ற ஒரு ரசிகர்கள் ராஜ்யத்தைப் படைத்த இசை
அரசர் மிகவும் எளிமையாக, ஒரு சித்தர் மாதிரி அமைதியாக இருந்தார்.
அவரைப் பார்த்ததும் எனக்குள் ஒரு ஆனந்த பரவசம் ஏற்பட்டது.

ஆயிரம் பாடல்களுக்கு மெட்டுப் போட்ட அவரது விரல்களைத் தொட்டு கை குலுக்க ஆசைப் பட்டேன். ஏனோ.. மனசு மறுத்து விட்டது.

அந்த நேரத்தில், அவருக்கு அது இடஞ்சலாக இருக்கும் என்று
எனக்குத் தோன்றியது. விடுதியை விட்டு வெளியே வந்து விட்டேன்.

அந்தி மழை பொழிகிறது .....

இது ஒரு பொன் மலை பொழுது ....

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு ...

காதல் ஓவியம் .. .

இப்படியாக, வைரமுத்து-இளைய ராஜா கூட்டணியில் உருவான
பாடல்கள் என் நினைவுக்கு வந்தது.

நிஜமாகவே, திரை இசைப் பாடல்களுக்கு அது ஒரு வசந்த காலமே !

நாம் மானசீகமாக நேசிக்கும் உன்னத படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலை வேந்தர்கள் இங்கே, நாம் வாழும் இடங்களில்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிற போது உள்ளம் மகிழ்கிறது.

வீடு வரும் வரை இதைப் பற்றிதான் சிந்தனை..

பிரபலங்களை ஏன் நட்சத்திரங்கள் என்று அழைக்கிறார்கள் என்று அப்போதுதான் கொஞ்சம் புரிந்தது. அவர்கள் மின்னுகிறார்கள்.
தொலைவில் தொட முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்.
நாம் அவர்களை அண்ணாந்துதானே பார்கிறோம் !

Tuesday, May 4, 2010

கடவுள்

நான் வணங்க ஒரு கடவுள்
வேண்டும் !

தினம் மனம் இதம் பெற
எனக்கொரு மதம்
வேண்டும் !

நாட்டில் சட்டம் ஒழுங்கு
சீராக இருப்பதற்கு
காவல் துறையா காரணம் ?
மக்களின் கடவுள் நம்பிக்கைதான்
காரணம் !

தடியடி, துப்பாக்கி, பீரங்கி
இவற்றால் உடலை
அச்சுறுத்தலாம்,
உருவத்தைச் சிதைக்கலாம் !
உள்ளத்தை உருக வைப்பதும்,
திருத்துவதும் ஆன்மிகமே !

நான், என் குடும்பம், என் பிள்ளைகள்
நன்றாக இருக்க வேண்டும்..
இறந்த பின்பு முக்தியும் பெற
வேண்டும் என்று எண்ணுவது
மூட நம்பிக்கையா ?
இருந்து விட்டு போகட்டும் !

நேர் பாதையில் நடப்பதற்கும்,
பிறர்க்குத் தீங்கு செய்யாமல்
இருப்பதற்கும் ஒரு வகையில்
ஆன்மிகம் நல்லது தானே ?

கடவுளே நேரில் வந்து பகுத்தறிவு
வாதம் செய்தாலும்
எனக்கு ஒரு கடவுள் வேண்டும்

Tuesday, April 13, 2010

வாழ்க்கை ஒரு சவால்

வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்திப்போம்

வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்வோம்

வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்வோம்

வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து போவோம்

வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக்கொள்வோம்

வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுவோம்

வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுவோம்

வாழ்க்கை ஒரு விநோதம்
அதனை கண்டறிவோம்

வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுவோம்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்துவோம்

வாழ்க்கை ஒரு பயணம்
அதை புகழுடன் முடித்து விடுவோம்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதை நிறைவேற்றுவோம்

வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவிப்போம்

வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதிப்போம்

வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்வோம்

வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்வோம்

வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடை காணுவோம்

வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடிப்போம்

Monday, April 12, 2010

நம்பிக்கை

முடியும் வரை முயல்வது
தன்னம்பிக்கை !

முடிவை இறைவனிடம் விடுவது
இறைநம்பிக்கை !

Tuesday, March 9, 2010

நேர்மையின் நிழல்

வீட்டுக்காரர் வீட்டு வாடகையை
இரண்டு மடங்கு உயர்த்திவிட்டாராம் !
விரக்தியுடன் சொன்னார் என்னிடம்
பாசமிகு பத்திரிகை நண்பர்.

அவர் ஒரு நேர்மையானவர்,
நேசமானவர்.

யாரிடமும் கை-நீட்டதவர் - அதனால்
எல்லோரும் இவருக்கு கைக்கூப்புவர் !

சாதியம் எதிர்ப்பார்
சமத்துவம் பேசுவார்.

பொதுக்காரியத்திற்கு முதலில் வருவார்,
பொதுவுடைமை வேண்டும் என்பார் !

புத்தாக்கச் சிந்தனை உள்ளவர்,
புதுக் கவிதைகள் புனைபவர் !

எப்போதும் எளிமையாய் இருப்பார்,
இயற்கையே இறைவன் என்பார் !

உலகிற்கே பத்திரிகை வாயிலாக
தகவல்களைத் தருபவர் - இன்று
வீட்டுத் தரகரிடம் கெஞ்சலாய்
ஒரு தகவல் கேட்டார்,
" மிகக் குறைந்த வாடகையில்
உடனடியாக வீடு கிடைக்குமா ?
என்று !

Friday, February 26, 2010

துப்பு நோய்

வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு
வந்த தொற்று நோய் - இந்த
பான்-பராக் பீடா !

தெருவெங்கும் துப்பித் தொலைக்கும்
துப்புக் கெட்ட ஜென்மங்கள்
நாளுக்கு நாள்
பெருகி வருகிறார்கள் !

நடந்து போவர்கள்,
சைக்கிளில் செல்பவர்கள்,
பைக் ஓட்டுபவர்கள் - அனைவரும்
சர்வ சாதரணமாக துப்புகிறார்கள் –
கொஞ்சமும் கூச்சம், பயம் இல்லாமல் !

கடுமையான சட்டம் கொண்டு
தடுக்கப் பட வேண்டும் !

சுத்தமான, ஆரோக்கியமான ஒரு
சுற்றுச் சுழலை – நமது அடுத்த
தலை முறைக்கு விட்டுச்
செல்வது நமது ஒவொருவரின்
கடமை !

Wednesday, February 17, 2010

காதல் – திருமணம்

காதல் -
அன்பு செய்வது !

திருமணம் -
அன்பு செலுத்துவது !

Thursday, February 11, 2010

ஈழம் வெல்லும்

இலங்கை வானொலியின்
தமிழ் நிகழ்ச்சிகளை
காதருகில் வைத்து
கேட்டதொரு காலம்...

இப்போது …
வந்து விழும் செய்திகளால்
காதே வெந்து போகும்..

துயரத்தின் மொத்த உருவமே
உனது பெயர்தான் ஈழமா !
இத்தனை பலிகள் வாங்கியும்
இன்னும் உனக்கு உயிர்த் தாகமா ?

மாண்ட வீரர்களின் மரணம்கூட
இங்கே அரசியலாகிறது...
காசுக்கு விற்பனையாகிறது !

சமாதியில் சாம்ராஜியம் - அங்கே
அரக்கர்களே அரசர்கள் !

எரிக்கப்பட்ட சாம்பலிலிருந்து
உயிர் பெற்று எழும்
பினிக்ஸ் பறவையாய்..
ஈழ இளையவர்கள் நாளை
அகிலத்தை ஆள வேண்டும் !

கொப்பளிக்கும் தமிழ்நதிகள்
குளிர வேண்டும்,
இவற்றை எல்லாம் - நம்
ஆயுள் முடியும் முன்பே
கண்டுவிட வேண்டும் !

கர்ம யோகி

செயலில் கரைந்து போ,
காணமல் போ,
பின்னர் -
நிலைத்து நிற்பாய் !

Friday, February 5, 2010

பணம்

பணம் என்னடா -
பணம் பணம்.....
குணம்தானடா
நிரந்தரம் !

எல்லாம் சரி, இதையும்
பணம் உள்ளவன்
சொன்னால்தான்
எடுபடும் !

Wednesday, February 3, 2010

ஜாதீ

ஜாதிகள் இல்லையடி
பாப்பா.... " பாடிய
பாரதியார் சிலைக்கு மாலை !
புகழாரம் !

நிகழ்ச்சி ஏற்பாடு -
பிராமணர் சங்கம் !!