Saturday, October 9, 2010

அகிலம் போற்றும் அன்னை

அன்னை தெரசா நம் அனைவருக்கும் தெரிந்த அன்னை.

அவரின் நூற்றாண்டு விழாவை உலகமே கொண்டாடி
போற்றுகிறது. அன்பை, அருளை, சேவையை தருவதற்காகவே
பிறந்தவள். எதைச் செய்தாலும் தியாகம் என்ற அடிப்படை
நோக்கத்தோடு இருப்பதை தன்னளிப்புத் தன்மையோடு
தருவது என்ற கொள்கையை விதைத்து சாதித்தார்.

ஒருமுறை அன்னை அவர்கள் ஆதரவற்ற முதியவர்களுக்காக
நிதி திரட்டும்போது ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
ஒரு வணிகரிடம் கையேந்தி காசு கேட்கும்போது, காரி
உமிழ்ந்தாராம். அன்னை கோபப்படவில்லை. அவரின் இந்த
செயலைக் கண்டு அவரை சபிக்கவும் இல்லை. சாந்தமாகச்
சொன்னார்.. " ஐயா .. நீங்கள் உமிழ்ந்த எச்சியை நான் எடுத்துக்
கொள்கிறேன். என் பிள்ளைகளுக்கு ஏதேனும் கொடுங்கள் ... "
என்று இன்னொரு கையை அந்த வணிகரிடம் நீட்டினார்.
அன்னையின் உறுதியான அன்பிற்கு முன்பு அந்த வணிகர்
தலை குனிந்தார். தனது செயலுக்கு வருத்தம் தெருவித்தார்.
பின்னர், வேண்டிய உதவிகளை அன்னைக்குச் செய்தார்.
அன்னையின் சகிப்புத் தன்மைக்கு இது ஒரு சான்று.

அன்னை அல்பினியா நாட்டில் 26.08.1910 ஆம் ஆண்டில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் ஆக்னஸ் கொன்சா. துறவறம் ஏற்று
இந்தியா வந்தார். தனது பெயரை தெரசா என்று மாற்றிக்
அமைத்துக் கொண்டார். மிகவும் பிறப்படுத்தப் பட்ட இந்தியர்கள்
முக்கியமாக தொழுநோயால் அவதியுற்றவர்களைத் தொட்டு
பாதுகாத்து அரவணைத்தார். சமுதாயத்தில் ஓரங்கட்டப் பட்டவர்கள்
என்ற பிரிவில் வாழ்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கு இவர் ஒரு
பள்ளியைத் தொடங்கினார். கூரை கூட இல்லாத இடத்தில்
தரையில் உட்கார்ந்து சிறுவர்களுடன் மண்ணில் விரலால் எழுதி,
வங்க மொழி கற்பித்தார். புன்னகை மின்ன கடுமையாக உழைத்து
அன்பின் அடையாளமாக திகழ்ந்தார்.

1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
190000 டாலருக்கான காசோலையைப் பெற்றார்.

1962 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 1980 ஆம் ஆண்டில் பாரத் ரத்னா
விருதும் பெற்றார்.

அன்பின் அன்னை 05.09.1997 அன்று மறைந்தார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாதிகள்,
ஏன் ... கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக எதிர்க்கும் பிறமத சகோதரர்கள்கூட
கிறிஸ்துவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும், சேவை அமைப்பிற்கும்,
தலை வணங்குகிறார்கள். அவர்களின் மனித நேயத்தை மதிக்கிறார்கள்.
இவற்றிற்கு அன்னை தெரசா போன்று தொண்டு செய்து வரும் எண்ணற்ற
அருள் சகோதரிகள்தான் அடிப்படை காரணங்கள் ஆகும்.

ஒரு புதுக் கவிஞன் அன்னையை இரண்டு வரிகளில் சொன்னான்.

" அன்னையே நீ கருவுற்று இருந்தால் ஒருவருக்கு தாயாகி இருப்பாய்..
கருணையுற்றதால் உலகிற்கே தாயானாய் .. " என்றார்.

ஆம். கருணை உள்ளங்கள் எல்லோரும் கடவுளின் இல்லங்கள்தான்.