Wednesday, December 1, 2010

சாவி பொம்மை

சாவிக் கொடுத்து ஓடி நின்ற
பொம்மையாய்
அலுவல் முடிந்து வீட்டிற்குள்
நுழைகையில்
கட்டி அணைக்க வருகிறான்
அன்பு மகன்.

அழுக்காய், வியர்த்துப்போய்
இருக்கிறேன்;
குளித்து விட்டு வருகிறேன்
என்றேன்;
அணைத்தக் கைகளை
விலக்கிய படி.

சற்று நேரத்திற்குள்...
குனிந்தத் தலை நிமிராமல்
வீட்டுப் பாடத்திற்குள்
மூழ்கி விட்டான்;
அவனின் ஆசிரியர்
அவனுக்குக் கொடுத்த
சாவியின் படி !

ஆம் !

யாரோ கொடுக்கும் சாவிக்கு
யாருக்காகவோ இயங்கிக்
கொண்டிருக்கிறோம்...
எந்திர மனிதனாய்,
பொம்மையாய் !

ஆற்றல்மிக்க இறைவா !

சாவி மனிதர்களை உமது
ஆவிக்குரிய மனிதர்களாய்
மாற்றும் !

எம்மை உமது கருவியாகப்
பயன்படுத்தும் !


எஸ். எஸ். ஜெயமோகன்