Saturday, September 4, 2010

எம். பி. ஏ பட்டம்

எம். பி. ஏ பட்டத்தின் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதையை உண்டு.

எனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் எம். பி. ஏ பட்டதாரிகள்.
அவர்கள் இப்போது உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள்.

ஷங்கர் ராமன் - இதற்க்குமுன் நான் பணி புரிந்த நிறுவனத்தின்
எம். டி. அவர் ஒரு எம். பி. ஏ., பட்டதாரி
இவருடைய நிர்வாகத் திறமையைக் கண்டு நான் பலமுறை
வியந்து இருக்கிறேன். வேலை வாங்கும் விதம், ஆளுமை,
முடிவு எடுக்கும் திறன் அனைத்தும் அசாதாரணமானது.
இவருக்கு உடம்பெல்லாம் மூளை என்று நாங்கள்
பேசிக் கொள்வோம். எப்போதும் பிசினஸ், பிசினஸ்தான் !

நான் பெரிதும் நேசிக்கும் திரைப்பட இயக்குனர் மணிரத்தினம்
ஒரு எம். பி. ஏ பட்டதாரி. " இந்தப் படிப்பு எனக்கு திட்டமிடுதலுக்குப்
பயன் படுகிறது " என்று பல முறை சொல்லி இருக்கிறார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் ஒருவர்,
அவரது நிறுவனத்தில் ஒரு முக்கிய பதவிக்கு என்னை
விண்ணப்பிக்கச் சொன்னார். நான் உடனடியாக மின் அஞ்சல்
செய்தேன். அவர் என்னை திருப்பி அழைத்து மிகவும் கடிந்து
கொண்டார்.

" நீ வெறும் பி.ஏ தானா ? எம். பி. ஏ படிக்க வில்லைய ? "
என்றார்.

" நீ ... ஜூனியர் விகடன், நக்கீரன் இதை எல்லாம் படித்து
வயசைத் தொலைத்து விட்டாய் ... படிக்க வேண்டியதை
படிக்கலடா !!! " என்றார்.

ஓங்கி முகத்தில் குத்தியது போல் இருந்தது அப்போது !


மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தொலை தூரக் கல்வி வாயிலாக
( அழகப்பா பல்கலைக் கழகம் ) எம். பி. ஏ., பயின்றேன்.

சென்ற வாரம், இரண்டாம் ஆண்டு-கடைசி செமஸ்டர் தேர்வு முடிவு
இணையத்தில் வெளி வந்தது.
அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சிதான் !
ஐம்பதாறு விழுக்காடு மதிப்பெண் பெற்றேன்.

நான் இப்போது எஸ். எஸ் ஜெயமோகன் எம். பி. ஏ.,
கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது !

பி.ஏ பட்டம் பெற்றது இருபது வயதில்.
எம். பி. ஏ பட்டம் பெற்றது நாற்பது வயதில் !

இடைப் பட்ட இருபது ஆண்டுகளில், நான் பட்ட, பெற்ற
அனுபவங்கள்தான் நிஜமான எம். பி. ஏ., என்பதை
நிதர்சனமாக உணர முடிகிறது.

என்ன செய்வது ?
உலக வாழ்வில், நாம் நமது தகுதியைச் சொல்ல காகிதத்தில்
அச்சடித்த சான்றிதழ்கள் தேவைப் படுகிறது !!