Saturday, July 28, 2012

இன்பம் இன்பம்
 -----------

மலரின் மென்மை..

வசீகரிக்கும் வாசம்..

வீசும் தென்றல்..

கனிகளின் சுவை..

வண்ணத்துப்
பூச்சிகளின் வண்ணம்..


இதம் தரும்
இளம்காலை சூரியன்..

முழு நிலவு..


நம்மைச் சுற்றி   
இயங்கும் இயற்கை

இதமானது
இன்பமானது !


இயற்கையை
நேசிப்போம் !

இயற்கையாய்
வாழ்வோம் !

இயற்கையும்,
இறைவனும் ஒன்று,
இயற்கையோடு இணைந்திருப்பது
இறைவனோடு இணைவதற்கு
இணையானது !

Thursday, June 28, 2012

மா. பொ. சி
தமிழர்களின் அடையாளம் வீரம்.
வீரத்தின் அடையாளம் மீசை.

 மா. பொ. சி என்றதும்
நினைவுக்கு வருவது
அவரது பெரிய மீசை !

தமிழ்மீதும், தமிழ் மண்ணின்மீதும்
அவருக்கு இருந்தது
தீராத ஆசை !

 நாட்டு விடுதலைக்காகப்
போராடி சிறை சென்றவர்,
சித்தரவதைகளை
அனுபவித்தவர்.

அங்கே, தமிழ் இலக்கியங்களையும் காவியங்களைக் கற்றார். '

சிலப்பதிகாரம்' அவருக்குச்
சிநேகதியானாள்,

' சிலம்புச் செல்வர்' என்று
தமிழ் மக்களால் அன்பாக
அழைக்கப் பெற்றார் !

Sunday, May 6, 2012

கலையா.. அறிவியலா ..

வணிகம் புரிவதும், தொழில் செய்வதும், நிர்வாகம் நடத்துவதும் அறிவியல் சார்ந்தது மட்டும்தானா ? இல்லை ! இவைகள் ஒரு கலைத்தன்மை வாய்ந்தவைகள் என்றும் மேலாண்மை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளைப் பார்ப்பதும், ஊழியர்களைப் பட்டியல்செய்து மாத ஊதியம் வழங்குவதும் கணிதமும், கணிதவியல் சார்ந்தது ஆகும். அதே நேரத்தில், ஒரு நிறுவனத்தை அடையாளப்படுத்தும் ஒரு சின்னத்தை ( லோகோ) உருவாக்குவது என்பது முழுக்க, முழுக்க கலை வடிவம் ஆகும்.

 பன்னாட்டு தொழில் முனைவோர் திரு ஆண்டி வூர்கோல் அவர்களின் முக்கியமான ஒரு மேற்கோள்... " பணம் ஈட்டுவது ஒரு கலை, வேலை செய்வதும் ஒரு கலை, வணிகம் புரிவது மிகச் சிறந்த ஒரு கலை " என்கிறார்.

 சந்தையில் அவ்வப்போது நிகழும் மாறுதல்கள், எந்த அளவிற்கு தாக்குதல்களை ஏற்படுத்தும் என்பதைப் பகுத்து ஆய்வதில் அறிவியல் அடங்கியுள்ளது. - சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் இவை அனைத்துமே மனித நடத்தைகள் பற்றிய நுணுக்கமான உணர்வுகளைக் கொண்டது. - மனதிற்குப் புரிதல் உணர்வையும், கண்களுக்கு அழகுணர்ச்சியையும் உருவாக்கச் செய்ய வேண்டிய வழிமுறைகளில் கலைகள் மேலோங்கி நிற்கிறது.

 வெற்றிப் பெற்ற விற்பனையாளர்கள் பொதுவாகச் சொல்லும் ஒரு வாக்கியம் " தொழில் ரீதியான அணுகுமுறை; தனிப்பட்ட முறையில் கவனத்தைக் கவர்தல் " ( Professional Approach and Personal Touch ) என்பதாகும்.

பன்னாட்டு மனிதவள மேம்பாட்டு வல்லுனரும், தொழில் ஆலோசகருமான திரு. டீன் ஸ்டான்லி கூறும்போது... " தொழில், வணிக மேலாண்மையில் ஐம்பது விழுக்காடு கலையும், ஐம்பது விழுக்காடு அறிவியலும் உள்ளது " என்கிறார்.

+++ ( வளர் தொழில் இதழுக்கு நான் எழுதிய கட்டுரையின் சுருக்கம் - ஏப்ரல் 2012 )

Sunday, April 1, 2012

விருது

.


" ஒவ்வொரு மனசும், ஒரு சிறிய பாராட்டுக்குதானே ஏங்குது ! "


' பசங்க ' படத்தில் வரும் முக்கியமான ஒரு வசனம் இது

பாராட்டுக்களும், விருதுகளும், அங்கீகாரமும் அவசியமானது.

(24.03.2012) அன்று சனிக்கிழமை சென்னை - தேவநேய பாவாணர் அரங்கில் எனக்கு
" பயன் எழுத்துப் படைப்பாளர் " எனும்
விருது, இதழ்கள்-பதிப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் எனக்கு வழங்கப்பட்டது.

திரு ரமேஷ் பிரபா ( சன் T.V குழுமத்தின் தலைவர் ) அவர்கள் விருதுகளை வழங்கி, பாராட்டுரை வழங்கினார். இது
துறை சார்ந்த படைப்பாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.

கணினி , ஏற்றுமதி வர்த்தகம், தொழில் வளர்ச்சி, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற துறை சார்ந்து, எழுதி வரும் படைப்பாளர்களுக்கான விருது அது. என்னோடு 20 பேர் விருது பெற்றார்கள்.

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பாக அவ்வப்போது
" வளர் தொழில் " மாத இதழில் எழுதியதற்காக
எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது.


ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் என்னை பரிந்துரை செய்தார். தொலை பேசியில் அழைத்து பேசினார்.  நான் நன்றி சொன்னேன்.

கதை , கவிதைகள் எழுதுவதற்கு நிறைய பேர்கள்
இருக்கிறார்கள்.

தொழில் - வணிகம் குறித்தும், நிதி மேலாண்மை, விற்பனை போன்றவற்றை எழுதுவோர் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். நான் எனது துறையில் தொடர்ந்து எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.

எத்தனையோ முறை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அனால், அன்றுதான் முதன்முறையாக மேடைக்கு வந்து, விருது வாங்கி இருக்கிறேன்.

என் மனைவி, மகன்கள், நண்பர்கள் உடன் இருந்தார்கள். கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.

அந்த சனிக்கிழமை, ஒரு சந்தோஷ சாயங்காலம்.


++

Thursday, March 1, 2012

அழகு

கனவுகள்

தூக்கத்தை கலைக்காதவரை
அழகு !


உறவுகள்

உதவி கேட்டகாதவரை
அழகு !


மனம்

சுருங்காதவரை
அழகு !மலர்

உதிராதவரை
அழகு !விண்மீன்

வானில் இருக்கும்வரை
அழகு !வசீகரிக்கும் எழுத்தாளர்கள்

நேரில் பார்க்காதவரை
அழகு !

Monday, February 20, 2012

கொலை வெறிப் பாடல்

" நமது கண்ணுக்குத் தெரியாமல் உலகின்
பல்வேறு மொழிகள் அழிந்து வருகிறது.
அதில் தமிழ் மொழியும் ஒன்று.
இன்னும் இருநூறு ஆண்டுகளில் தமிழ்
பேசுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும்.
தமிழில் எழுதுபவர்களைப் பார்ப்பதே அரிதாக
இருக்கும் " என்கிறது மொழியியல் ஆராய்ச்சி
ஆய்வுகள்.


உலகின் பழமையான மொழி நமது தமிழ்மொழி.
அது அழிந்து விடுமா ? என்ற அச்சமும்,
சந்தேகமும் எழுந்தது.
அப்படி நடந்து விடக் கூடாது என்பதுதான்
என் எண்ணம்.


தாய் மொழிப் பற்றும், தனது மொழியைக்
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும்
இல்லாத ஒரு தேசத்தில், எந்த மொழியும்
தானாகவே அழிந்து விடும்.
இந்த இக்கட்டு இப்போது நமது தமிழ்
மொழிக்கு ஏற்பட்டு உள்ளது.


நடிகர் தனுஷ் நடித்து, பாடி இருக்கும்
" ஒய் திஸ் கொலை வெறி " பாடல்
உலகம் முழுவதும் பரவி இருப்பதாகச்
சொல்கிறார்கள். அதாவது தமிழை
களங்கப்படுத்தி, கொலை செய்து உலகம்
முழுவதும் பரப்பி இருக்கிறார்கள்.
அந்தப் பாடலில் ஆங்கிலத்தை மிகவும்
அசிங்கமாகக் கலந்து, தமிழை உச்சக்கட்ட
அளவிற்கு கொலை செய்திருக்கிறார்கள்.


இந்தப் பாடலை வெட்கமே இல்லமால்
ஒவ்வொரு தமிழனும் ரசித்துக் கேட்கிறார்கள்

செல்போனில் ரிங் டோன் வைத்து கேட்கிறார்கள்.

நடிகர் தனுஷின் பிரபலத்தையும்,
புலமையையும் கேள்விப்பட்டு
நமது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்
விருந்து கொடுத்து, பாராட்டி இருக்கிறார்.
அப்படி என்ன ? சாதனை புரிந்துள்ளார்
என்று புரியவில்லை.


இந்த "கொலை வெறி பாடல் "
மிகப் பிரபலம் ஆனதற்காக திருப்பதிக்குப்
போய் மொட்டை அடித்து இருக்கிறார்
தனுஷ்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்து
" வரும் காலத்தில் இந்த மாதிரியான
நிறையப் பாடல்களைப் பாடப்போகிறேன் "
என்று வேறு சொல்லி இருக்கிறார்.


இவர் செய்யப் போகும் கலைச்சேவையை
நினைத்தால் உள்ளம் கலங்குகிறது.
தனிப்பட்ட முறையில் நடிகர் தனுஷின்மீது
எந்தவேத வெறுப்பும், கோபமும் யாருக்கும்
கிடையாது.


சினிமா மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஊடகம்.
அதில், சமூக அக்கறை இல்லாமல் நடந்து
கொள்வதால்தான் உள்ளம் வேதனைப்
படுகிறது.


மூத்த கவிஞர்களான வாலி, வைரமுத்து
போன்றோர்கள் இந்த கொலை வெறி
பாடலைக் குறித்து பேசியதாகத் தகவல்
இல்லை. கவலைப் பட்டதாகத்
தெரியவில்லை.


ஒருவேளை, நடிகர் தனுஷ் , சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்தின் மருமகன் என்பதால்கூட
இருக்கலாம் !


இந்த " கொலை வெறிப் பாடலை ஒட்டு மொத்த
தமிழகமும் புறக்கணிக்க வேண்டும்.
வலுவான எதிப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
அப்போதுதான், வருங்காலத்திலாவது
இம்மாதிரியான அருவருப்புப் பாடல்கள்
வருவதைத் தடுக்க முடியும்.


அந்தக் காலத்தில் அறநெறியுடன்,
தமிழை வளர்த்து இருக்கிறார்கள்.
இந்தக் காலத்தில், கொலை வெறியுடன்
தமிழை கொலை செய்து கொண்டு
இருக்கிறார்கள்.


"கொலை வெறியை" ஒரு சாதரணமான
ஒரு சொல்லாக்கி இருக்கிறார்கள்.
மக்களிடம் மறைமுகமாக, கொலை
வெறியைத் தூண்டி வருகிறார்கள்.

Tuesday, January 31, 2012

சாதாரண ஜெயமோகன்

தமிழ் இலக்கிய உலகில் ' ஜெயமோகன்'
பெயரைச் சொன்னதும் ஓர் அதிர்வு
ஏற்படுவதை பார்த்து வருகிறேன்.

ஜெயமோகனின் ஆழமான, நுட்பமான
எழுத்தின்மீது எனக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு.

'இவர் நோபெல் பரிசுக்குத் தகுதியானவர்'
என்று சொல்கிறது ஒரு கூட்டம்.

'இவர் மலையாளி. இந்துமத வெறியர்,
போலியான காந்தியவாதி ' என்கிறது
ஒரு கூட்டம்.

சமிபத்தில், ஒரு இலக்கியக் கூட்டத்தில்
பார்வையாளராக கலந்து கொண்டேன்.
நண்பர் ஒருவர், தனது நண்பர் ஒருவரை
எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

என்னை " ஜெயமோகன் " என்றார்.

அவரோ,"ஜெயமோகனா!." என்றார்
சத்தமாக !

அதிர்ச்சி, வெறுப்பு, கொஞ்சம் ஆத்திரம்
எல்லாமே தெரிந்தது அவரது கண்களில்.

உடனே நண்பர்,
"இவர் எஸ். எஸ் ஜெயமோகன்,
ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்"
என்றார்.

அப்போது, அவர் என்னை சாதாரணமாகப்
பார்த்தார். நான் சொன்னேன்,
"நான் சாதாரண ஜெயமோகன்" என்று !