Saturday, December 10, 2011

கிறிஸ்துமஸ் வரும் நேரம்

கிறிஸ்துமஸ் ஸ்டார்
------------------

அன்று பெதலகேமில்
உதிர்த்த நம்பிக்கை நட்சத்திரம்,
ஆண்டவர் பிறக்கப் போகிறார்
என்பதன் அருள் அடையலாம்.

நமக்காக ஒரு மெசியா பிறந்துள்ளார்
என்று மூன்று ராஜாக்களுக்கும் வழி காட்டிய
அந்த நட்சத்திரம், நம்
இல்லத்திலும் ஒளிவீசி
நமக்கு ஞானஒளி காட்டட்டும்.

கிறிஸ்துமஸ் மரம்
-----------------
பனி சூழ்ந்த இரவில், தன் வீட்டின்
மரத்தில் ஏரியும் மெழுகுவர்த்தியால்
அலங்கரித்து, கிறிஸ்துவின்
வருகை எவ்வளவு
பிரகாசமானது என்று
மார்டின் லூதர் தன் குடும்பத்திருக்கு
காட்டிய அருள் அடையாளம்தான்
கிறிஸ்துமஸ் மரம் என்பது வரலாறு.

மரம் என்பது உறுதிக்கும், வளர்ச்சிக்கும்,
பயனுக்குமான உதாரணம். இவைபோலவே
உறுதியாக நிலைத்திருப்போம்.
எல்லோருக்கும் பயனளிப்போம்.

கிறிஸ்துமஸ் தாத்தா
-------------------

குழந்தைகள் குதூகலத்துடன்
பார்த்து மகிழ்வது
கிறிஸ்து தாத்தாவைதான்.

கிறிஸ்துமஸ் இரவில் மாயமாய் வந்து
எல்லோருக்கும் பரிசுகளை அள்ளித்
தருபவர். எல்லோருக்கும் பிரியமானவர்.

நாம் பரிசு பெறுபவர்களாக
மட்டுமின்றி, பிறருக்கு பரிசுகளை
கொடுத்தும் மகிழ்வோம்.

++++

( 'அருள் நாதம்' இதழுக்காக நான் எழுதியது )

Thursday, December 8, 2011

இதழாள்

இன்று, புதிதாய்
வாங்கி வந்த
வார இதழை
புரட்டிப் பார்க்கும்போது.....

முழுசாய் படித்து முடிக்காத
சென்றவார இதழ்
மௌனமாய்
முனங்குகிறாள் !

Thursday, November 24, 2011

ஜனநாயக சிலுவை

அன்று,

பிலாத்து மன்னன்
தவறாக தீர்ப்பிட்டான்,
சிலுவை சுமந்தார் இயேசு !


இன்று,

ஆட்சியாளர்கள்
தவறாக திட்டமிடுகிறார்கள்,
விலைவாசி சிலுவையை
தினமும் சுமக்கிறோம் !

Sunday, November 13, 2011

ஆத்ம தாகம்

எண்ணங்களையும், கதைகளையும் வார்த்தைகளால்
கோர்த்து அதை அச்சு வடிவில் பார்ப்பது என்பது
ஒரு வகை இன்பம்.

அதையே, கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, பின்னர்
படமாக திரையில் பார்க்கும்போது கிடைப்பது பேரின்பம்.

அந்த இனிய அனுபவம் எனக்குக் கிடைத்தது.

"ஆத்ம தாகம்"- குறும்படத்தின் கதைச் சுருக்கம் இதுதான்.


கல்லறைத் திருநாள். கல்லறைத் தோட்டம், அதில்,
சூசை, தாமஸ் ஆகிய இரண்டு கல்லறைகள்.

தாமசின் கல்லறைகள் மாலையிட்டு, மலர்தூவி,
மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இருக்கிறது. சூசையின்
கல்லறை கட்டான் தரையாக இருக்கிறது.
யாரும் வரவில்லை. பராமரிக்கப் படவில்லை.

இரண்டு ஆத்மாக்கள் ஆத்மார்த்தமாக பேசிக்
கொள்கிறார்கள். அழுகை, புலம்பல், ஏக்கம்
அத்தனையையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பாதிரியார் ஜெபம் செய்து, கல்லறை மந்திரிப்பு
செய்கிறார்.தீர்த்தம் தெளிக்கிறார். சூசை, தாமஸ்
கல்லறைகள் மீதும் விழுகிறது. ஆத்மாக்கள்
குளிர்விக்கபடுகிறது.

பதினைந்து நிமிட குறும்படம். நினைத்ததைவிட
அற்புதமாக வந்திருந்தது.

சாந்தோம் தேவாலயத்தில் நவம்பர் இரண்டாம் தேதி
ஆத்மாக்கள் நினைவு நாள் அன்று, பேராயர் சின்னப்பா
அவர்கள் வெளிட்டார். அன்று எல்லோருக்கும் படம்
காட்டப்பட்டது.

பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள்.
நண்பர்கள் வாழ்த்துக் கூறினார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபையின் மதிப்பீடுகளை
அழகாகச் சொல்லி உள்ளீர்கள் என்றார்கள்.

படத்தில், சூசை, தாமஸ் ஆகிய இருவரின் ஆத்மாக்களின்
தாகம் தணிந்தது.

நிஜத்தில், இந்தக் குறும் படத்தை உருவாக்கிய எங்களது
ஆன்ம தாகமும் தணிந்தது.

என்மீது நம்பிக்கை கொண்டு, இந்தப் படத்தை தயாரித்த
பாசமிகு அருட்தந்தை பீட்டர் ஜெரால்ட் அவர்களுக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Sunday, September 18, 2011

முகநூல்

FACE BOOK
---------

நண்பர்களுடன்,
நண்பர்களின் நண்பர்களுடன்
கணினி வழியாக
கைக்குலுக்கி மகிழலாம் !

அதே நேரத்தில்,

முகம் பார்க்க வருபவர்களை
மூழ்கடிக்கச் செய்யும்
அழகான
ஆழ்கடல் !

Saturday, August 13, 2011

பரிசு

பரிசு" இன்றைய மாணவர்களின் மனதில் மேலோங்கி இருப்பது
சாதனை எண்ணங்களா ? அல்லது பொழுது போக்கு
எண்ணங்களா ? " என்ற தலைப்பில் நடைபெற்ற
பட்டிமன்றத்தின் தீர்ப்பு எல்லோரும் எதிர்ப்பார்த்தபடியே
சாதனை பக்கமே இருந்தாலும்கூட, பொழுதுபோக்கின்
அவசியத்தை நடுவர் எடுத்துக் கூறிய விதம் நன்றாக
இருந்தது.

தூய மரியன்னை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்
பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன்
ஆண்டோ ஜெனித் " சாதனை எண்ணங்களே "
என்ற குழுவில் பேசினான்.

சிறந்த பேச்சாளர் என்ற பரிசும், பதக்கமும் பெற்றான்.

ஆயிரம் பேர் நிறைந்த கூட்டத்தில் பலத்த கைத்தட்டலுக்கு
மத்தியில் அவன் பரிசை பெற்றபோது, நானும் என் மனைவியும்
மகிழ்ச்சியில் நனைந்தோம்.

அவனுக்காக நான் சிறிது நேரமே ஒதுக்கி எழுதிக்
கொடுத்தேன். அப்படியே உள்வாங்கி, அழகாக
வெளிப்படுத்தினான்.

பிள்ளைகளை திறமையாளர்களாக உருவாக்குவதில்
பெற்றோர்களின் பங்குதான் அதிகம் என்பதை
மனபூர்வமாக உணர்கிறேன்.

இனி, பிள்ளைகளுக்காக அதிக நேரம் ஒதுக்க
முடிவு செய்து உள்ளேன்

மகன் வாங்கிய பரிசில் மாற்றம் அடைந்தது
மனசு !


Friday, July 15, 2011

இதயம்

சென்னை, முகப்பேரில் உள்ள எம். எம். எம். (MADRAS MEDIAL
MISSION) மருத்துவமனையில் எனது இளைய மகன்
கவின்- ஜார்ஜ்க்கு 13,06.2011 அன்று இதய அறுவை
நல்லபடியாக நடந்தது.

பிறக்கும்போதே, இதயத்தில் ஒரு சிறிய ஓட்டை (5 mm )
இருந்தது. இது தானாய் அடைபட்டு விடும் என்று ஐந்து
வருடம் காத்து இருந்தோம். முடிவில், அறுவை சிகிச்சைதான்
தீர்வு என்றார்கள்.

" இரக்கம் உள்ள இறைவன் ஏன் இதயத்தில் ஓட்டை போட்டார் "
என்று பல நாட்கள் நினைத்து இருக்கிறேன். இறைவனிடம்
வேண்டி இருக்கிறேன்.

மருத்துவமனியில் இருந்த நாட்கள் முள்மீது படுத்திருந்த
நாட்கள்தான். சோகமான மனிதர்கள், ஏக்கமான மனிதர்கள்,
ஏழ்மையான மனிதர்கள், இவர்களைச் சந்தித்தில் பெற்ற
அனுபவங்கள் மூன்று பட்டங்களுக்குச் சமம்,.

அங்குள்ள டாக்டர்கள், நர்சுகள், சிஸ்டர்கள் இவர்களின்
கனிவான சேவைகளை நேரில் பார்த்தேன். நேகிழ்ந்தேன்.

அங்கு அறிமுகமான முஸ்லிம் நண்பர் என்னிடம் சொன்னார்,
" அண்ணே ! இவர்கள் இறந்த உடன் நேரடியாக மோட்சத்துக்கு
போவார்கள் " என்றார்.

இவர்களின் கனிவான சேவைக்கு இந்த ஒரு வார்த்தை ஒரு
உதாரணம்.

கவினுக்கு ரத்தம் எடுத்து டெஸ்ட் செய்தாக வேண்டும்.

நரம்பில் ஊசி போடுகிறார்கள். சரியாக நரம்பு பிடிபடவில்லை.
அழுகிறான், துடிக்கிறான்.

" ஊசி குத்தினா வலிக்கும் ! உங்களுக்கு என்ன தெரியும் ?! "
என்றான் குழந்தை குழந்தைத்தனமாக.....

உடனே பக்கத்தில் இருந்த வார்டுபாய் நர்சிடம், " சிஸ்டர்
என்னுடைய ரத்தத்தை கொஞ்சம் எடுங்க" என்றான். ஊசியால்
குத்தி கொஞ்சம் ரத்தம் எடுத்தார்கள். அப்போது வார்டுபாய்
சொன்னான், " எனக்கு வலிக்கவே இல்லை. நீயும் கையை
நீட்டு, வலிக்காமல் ரத்தம் எடுக்கிறோம் " என்றான். அப்போது
அழாமல் கையை நீட்டினான்.

அந்த இளைஞனின் பரந்த மனதை எப்படி பாராட்டுவது என்றே
தெரியவில்லை.

அறுவை சிகிச்சை செய்த அன்று ரத்த தானம் செய்த நண்பர்களை
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். கலைஞர் காப்பீடு திட்டம்
எனக்கு கிடைக்க உடுனுக்குடன் உதவிய நண்பர்களையும்,
அழுவலர்களையும் எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
இவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்

அருட்தந்தை பீட்டர் ஜெரால்ட், திரு பாண்டிச் செல்வம்,
திரு மதார், ஆரோக்ய நாதர் ஆலய நண்பர்கள்,
அலுவலக நண்பர்கள் மற்றும், உறவினர்கள்
இவர்கள் அனைவரும் எங்கள் மீது காட்டிய அன்பும்,
ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை.

அந்த மருத்துவமனையில் ஆண்டிற்கு சுமார் 200 ஏழை
( இருதயம் பாதிக்கப்பட்ட ) குழந்தைகளுக்கு முற்றிலும்
இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
இதற்கு ஆகும் மொத்த செலவையும் மலையாள மனோரமா
பத்திரிகை ஏற்றுக் கொள்கிறது.

அங்கு சென்றபோதுதான் இதை அறிந்தேன். மலையாள
மனோரமாவின் மனித நேயத்திற்கு மரியாதையான
வணக்கங்கள் !

இப்போதெல்லாம் நான் அடிக்கடி இப்படி நினைப்பேன்...

"இறைவன் நம்மைச் சுற்றி இரக்கம் நிறைந்த சில
மனிதர்களை
நமக்காக படைத்து இருக்கிறார்? என்று. ! I

Sunday, May 1, 2011

வியர்வையின் வாசம்

சென்னை- மெரினா கடற்கரையில் உள்ள சிலைகளில்
மிகவும் மதிப்பு வாய்ந்தது உழைப்பாளர் சிலை.

எப்போது போனாலும் அந்தச் சிலையை சில நிமிடங்கள்
உற்றுப் பார்ப்பேன். நரம்புகள் புடைக்க வேலை செய்யும்
உடல் உழைப்பாளர்களின் உடல்கள் ஆயிரம் அர்த்தங்களைச்
சொல்லும்.

திட்டமிட்டு உழைப்பவர்கள் முன்னேறிச் சென்று கொண்டே
இருக்கிறார்கள். பசிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள்
ஓடிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

"ஒரு சான் உயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம். " கவிஞர் வாலி அவர்களின்
பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது,

எழுபது வயது நிரம்பிய முதியவர்கள்கூட கடுமையாக
உழைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மிகவும் சொற்ப
வருமானத்திற்காக போராடுகிறார்கள்,.
உழைப்பு மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கிறது.

கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதில்
ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
உயர்வையும், வளர்ச்சியையும் இயற்கையிடம் ஒப்படைத்து விட்டு
உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு, சிலை வடிவில் உழைக்கும்
உழைப்பாளர்கள் நமக்கெல்லாம் நம்பிக்கை தந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.

ஆம், மயக்கும் மல்லிகையைவிட உழைப்பளர்களின் வியர்வைக்கு
வாசனை அதிகம்.

=====

Thursday, March 17, 2011

வாணியின் குரல்

வசீகர குரலுக்குச் சொந்தக்காரன் திருமதி வாணி ஜெயராம்.

மென்மை, இனிமை, வசீகரம், கொஞ்சம் கம்பீரம்
இவை அனைத்தும் சேர்ந்த கலவை அவரது கீதம்.

சிலரின் பாடலைக் கேட்க்கும்போது மனதை வருடும்.
சிலரின் பாடல் மனதுக்குள் ஊடுருவும்.
வாணியின் பாடல் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது.

சங்கர் கணேஷின் இசையில்தான் அதிகமாக
பாடி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.


" மேகமே... மேகமே... பால் நிலா தேயுதே.. ! "
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் மனம்
மழை மேகமாகவே மாறும்.

வாணியின் லட்சக்கணக்கான ரசிகர்களின் நானும்
ஒருவன் என்பதில் எனக்கு பெருமிதம்தான் !

++

Wednesday, January 19, 2011

புத்தகக் கண்காட்சி

புத்தகத்திற்கான
சுயவரம் !


வண்டுகளை வரவழைக்க
மலர்கள் நடத்தும்
மாநாடு !

Friday, January 7, 2011

மழலை இன்பம்

மகனே ... நீ..
துள்ளிக் குதித்து
குதுகுலமாய் பள்ளிக்குப்
போகும்போது - என் மனசு
பட்டாம் பூச்சியாயாக மாறுகிறது !

உன் பிஞ்சுக் கைகளை
அசைத்து டாட்ட பை பை
சொல்லும்போது - உனக்காக
பீஸ் கட்டிய சுமைகூட
மறைந்து போகிறது

Tuesday, January 4, 2011

வெறுமை

நிதர்சனத்தை உணரும்போது
நிர்வாணமாகிறேன்.

நிர்வாணம் பிடிக்காததால்
நிஜத்தையே வெறுக்கிறேன் !