Wednesday, May 19, 2010

முகம்

ஒரு வாரமாய் தொடர்ந்து
ஜுரம்,

ஒட்டியது
கன்னம்.

முகச் சவரம் செய்யாத
என் முகத்தைக் கண்ணாடியில்
பார்த்தேன்..

தெரிந்தது -
அப்பாவின் முகம் !!

Sunday, May 16, 2010

இசையின் தரிசனம்


சமிபத்தில், ஏற்றுமதி-வர்த்தகம் தொடர்பான ஒருநாள் கருத்து அரங்கம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்று மாலை நேரத்தில் வெளியே வரும் போது, வரவேற்பு கூடத்திற்கு அருகில் இசை அமைப்பாளர் இளையராஜா அங்கு தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இசைக்கென்று இசைகின்ற ஒரு ரசிகர்கள் ராஜ்யத்தைப் படைத்த இசை
அரசர் மிகவும் எளிமையாக, ஒரு சித்தர் மாதிரி அமைதியாக இருந்தார்.
அவரைப் பார்த்ததும் எனக்குள் ஒரு ஆனந்த பரவசம் ஏற்பட்டது.

ஆயிரம் பாடல்களுக்கு மெட்டுப் போட்ட அவரது விரல்களைத் தொட்டு கை குலுக்க ஆசைப் பட்டேன். ஏனோ.. மனசு மறுத்து விட்டது.

அந்த நேரத்தில், அவருக்கு அது இடஞ்சலாக இருக்கும் என்று
எனக்குத் தோன்றியது. விடுதியை விட்டு வெளியே வந்து விட்டேன்.

அந்தி மழை பொழிகிறது .....

இது ஒரு பொன் மலை பொழுது ....

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு ...

காதல் ஓவியம் .. .

இப்படியாக, வைரமுத்து-இளைய ராஜா கூட்டணியில் உருவான
பாடல்கள் என் நினைவுக்கு வந்தது.

நிஜமாகவே, திரை இசைப் பாடல்களுக்கு அது ஒரு வசந்த காலமே !

நாம் மானசீகமாக நேசிக்கும் உன்னத படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலை வேந்தர்கள் இங்கே, நாம் வாழும் இடங்களில்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிற போது உள்ளம் மகிழ்கிறது.

வீடு வரும் வரை இதைப் பற்றிதான் சிந்தனை..

பிரபலங்களை ஏன் நட்சத்திரங்கள் என்று அழைக்கிறார்கள் என்று அப்போதுதான் கொஞ்சம் புரிந்தது. அவர்கள் மின்னுகிறார்கள்.
தொலைவில் தொட முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்.
நாம் அவர்களை அண்ணாந்துதானே பார்கிறோம் !

Tuesday, May 4, 2010

கடவுள்

நான் வணங்க ஒரு கடவுள்
வேண்டும் !

தினம் மனம் இதம் பெற
எனக்கொரு மதம்
வேண்டும் !

நாட்டில் சட்டம் ஒழுங்கு
சீராக இருப்பதற்கு
காவல் துறையா காரணம் ?
மக்களின் கடவுள் நம்பிக்கைதான்
காரணம் !

தடியடி, துப்பாக்கி, பீரங்கி
இவற்றால் உடலை
அச்சுறுத்தலாம்,
உருவத்தைச் சிதைக்கலாம் !
உள்ளத்தை உருக வைப்பதும்,
திருத்துவதும் ஆன்மிகமே !

நான், என் குடும்பம், என் பிள்ளைகள்
நன்றாக இருக்க வேண்டும்..
இறந்த பின்பு முக்தியும் பெற
வேண்டும் என்று எண்ணுவது
மூட நம்பிக்கையா ?
இருந்து விட்டு போகட்டும் !

நேர் பாதையில் நடப்பதற்கும்,
பிறர்க்குத் தீங்கு செய்யாமல்
இருப்பதற்கும் ஒரு வகையில்
ஆன்மிகம் நல்லது தானே ?

கடவுளே நேரில் வந்து பகுத்தறிவு
வாதம் செய்தாலும்
எனக்கு ஒரு கடவுள் வேண்டும்