Saturday, July 3, 2010

ஆறுதல் ஒரு பக்கக் கதை

கதவைத் தட்டும் சப்தம் கேட்டு படபடப்புடன் எழுந்து
போனாள் என் மனைவி.

'முறுக்கு', 'அதிரசம்' விற்கும் சிறுவன் வாசலில் நிற்கிறான்.

" டேய் .. உங்களுக்கெல்லாம் எத்தனைமுறை சொன்னாலும் புரியாதா?
இந்த மாதிரி பகல் நேரத்துல, அதுவும் லீவு நாளு அதுவுமா, வீட்டுக்கு
வந்து ஏண்டா தொந்தரவு பண்ணுறீங்க ! ? பொரிந்து தள்ளினாள்
என் மனைவி.

" லலிதா ... ஒரு நிமிஷம்; அந்தப் பையங்கிட்ட கொஞ்சம் அதிரசம்,
முறுக்கு வாங்கிக்கோ" என்றேன்.

" டேய்... அஞ்சு ரூபாய்க்கு முறுக்கு, அஞ்சு ரூபாய்க்கு அதிரசம் கொடு "..
எரிச்சலுடன் வாங்கினாள்.

" ஏங்க.. நீங்கதான் எண்ணெய் பலகாரம் எல்லாம் விரும்பிச் சாப்பிட
மாட்டிங்களே, அப்புறம் எதுக்கு வாங்கச் சொன்னிங்க? " திகைப்புடன்
கேட்டாள்.

" அந்தப் பையனுக்கு ஒரு வியாபாரம் கொடுக்கலாம்ன்னுதான்.
அதனால அவனுக்கு ஏதோ லாபம் கிடைக்குங்குறதுக்காக
மட்டுமல்ல.. நான் இப்போ பார்த்துட்டு இருக்குற சேல்ஸ்
ரெப் வேலையின்போது சில கம்பெனிக்காரங்க என்னை
உள்ளேயே விடமாட்டங்க. மரியாதை இல்லாம பேசுவாங்க..
ஆனாலும் ஒரு சில நேரத்துல சிலர், மதிச்சு, என்னிடம்
பொருள்களை வாங்கலனாக்கூட ஆர்வமா கேப்பாங்க.
அப்போ எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கும்
தெரியுமா ? என் தொழில்மீது எனக்கிருக்கும் மதிப்பு இன்னும்
மிகுதியாகும் ! "

நான் பேசிக்கொண்டிருக்கும்போதே.. மறுபடியும் யாரோ
கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.

என் மனைவி இப்போது புன்முறுவலுடன் எழுந்துச் சென்றாள்

++++

நான் எழுதிய இந்தக் கதையை
குமுதம் வெளியிட்டது

நன்றி : குமுதம்.

No comments:

Post a Comment